Sunday, January 5, 2020

ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7



கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுக்கும் வகையில், உலக அளவில் கணினிகள் மற்றும் லேப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆபரேடிங் சிஸ்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.எதிர்காலத்தில் விண்டோஸ் 10 பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது.
எனவே, இந்த தேதிக்குள், வின்டோஸ் 7ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது டேப்டாப்பில் வின்டோஸ் 10ஐப் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு. அதிர்ச்சியில் மாணவர்கள்.!!


விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதத்தால் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, பள்ளிகள் திறப்புக் குறித்து குழப்பிய கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் உடனடியாக பயிற்சித் தேர்வுக்குத் மாணவர்களால் தயாராக முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

13 நாள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில், தொடர்ந்து, 13 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு, டிசம்பர், 23ல் முடிந்தது; மறுநாள் முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜனவரி, 2ல், பள்ளிகள் திறக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின், உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஜனவரி, 3க்கு பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், ஓட்டு எண்ணிக்கை முடிய கூடுதல் நாட்களாகும் என, தேர்தல் ஆணையம் கூறியதால், பள்ளிகள் திறப்பு, ஜனவரி, 4க்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், ஜனவரி, 4லிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்தல் பணி மற்றும் ஓட்டு எண்ணிக்கை பணிகளை பார்த்ததால், அவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், ஜனவரி, 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 13 நாட்கள் விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் நலன் கருதி முன் கூட்டியே பள்ளிகளைதிறந்து, பாடங்களை நடத்த துவங்கி விட்டன. இன்று முதல் மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளிலேயே, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

தாய்மொழி வழியாக உயர் கல்வி: மத்திய அரசு திட்டம்

உயர் கல்வி வகுப்புகளில், தாய்மொழி வழிக்கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில், மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.

மருத்துவம், பொறியியல் உட்பட, உயர் கல்வி வகுப்பு பாடங்கள், ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன. தாய் மொழி மூலம், துவக்க, உயர்நிலை வகுப்பு படித்த மாணவர்கள் பலர், உயர்கல்வி பாடங்களை, ஆங்கில வழியில் படிக்கும்போது, சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், ஏராளமான மாணவர்கள், உயர் கல்வியை பாதியிலேயே கைவிடுவதும், மன உளைச்சலுக்கு ஆளாவதும் நடக்கிறது.கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை, வரைவு அறிக்கை தொடர்பாக, மத்திய அரசு, பல்வேறு கருத்துகளைப் பெற்றது. இதில், மருத்துவம், பொறியியல் உட்பட, உயர் கல்வி வகுப்பு பாடங்களை, தாய்மொழி வழியாகப் பயில்வதற்கு சாத்தியம் இருந்தால், அந்த வழியாகப் பயில்வதற்கு, ஊக்கம் தரும் வகையிலான திட்டத்தை, மத்திய அரசு வகுக்க உள்ளது.தமிழ் உள்ளிட்ட, 22 இந்திய மொழிகளில், உயர் கல்வியைப் பயில்வதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்கள், துவக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளை, ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றியமைத்து வருகின்றன. இதை தவிர்த்து, தாய்மொழி வழிக் கல்விக்கே ஊக்கமளிக்கும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

'நீட்' தேர்வு பதிவுக்கு இன்று கடைசி நாள்


'நீட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும்மாணவர்களுக்கு, மே, 3ல், நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிசம்பர், 2ல் துவங்கியது.

இன்று வரை, பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இன்று இரவுக்குள் விண்ணப்ப பதிவை முடிக்கும்படி, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

'டான்செட்' நுழைவு தேர்வு: விண்ணப்ப பதிவு நாளை துவக்கம்



எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான, 'டான்செட்' நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழக அரசின் பொது நுழைவு தேர்வில், பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, இந்த நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியே, டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, பிப்ரவரி, 29 மற்றும் மார்ச், 1ல் டான்செட் நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.

பதிவுக்கான அவகாசம், ஜனவரி, 31ல் முடிகிறது. மேலும் விபரங்களை, அண்ணா பல்கலையின், https://tancet.annauniv.edu/tancet/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள்


மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஆங்கில வழி கல்வி மோகம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்கில வழி வகுப்புகளை அதிகரிக்கவும், ஆங்கில பயிற்சிகளை வழங்கவும், தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆங்கில திறன் வளர்ப்பு வகுப்புகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த வகுப்புகளை திட்டமிட்டு, ஆசிரியர்களை பெருமளவில் பங்கேற்க செய்யுமாறு, கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.